நான் ஒரு மரம். காட்டில் என் உற்றார் உறவினருடன் வாழ்ந்து வந்தேன். காட்டில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. காட்டில் மயிலாட கூடவே குயிலும் கூவ புள்ளினங்களுடனும் புல்லினங்களுடனும் வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் மானிடர்கள் கையில் ஆயுதங்களுடன் வந்தனர்.
சுற்றியிருந்த என்னவர்கள் இதனைப்பார்த்து கிலிக் கொண்டு விசித்திர சத்தங்களை எழுப்பினர். எனக்கும் கிலிபிடித்துக் கொண்டிருந்தது. செவதறியாது நின்றேன். என் போன்ற மரங்கள் நிற்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? என் மீது அமர்ந்திருந்த பறவைகளும் பறந்து போய்விட்டன.
இருவர் வந்தனர். கையில் ஏதோ ஒரு இயந்திரம் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் ஏதோ ஒரு விசையைத் திருகியதும் அவ்வியந்திரம் பெருஞ்சத்ததுடன் சுழன்றது. திடீரென்று என்னருகில் நின்றிருந்த என் தோழனை அவ்வியந்திரம் அறுக்கத் தொடங்கியது. என் கண் முன்னே என் நண்பன் மடிகிறான். தன் நண்பன் ஒருவன்
கொல்லப்ப்டும் போது அருகில் இருந்தும் ஏதும் செய்யவியலாது நின்று கொண்டிருப்பதைக் காட்டிலும் ஒரு இழிவு உண்டோ? என் நிலை அதுதான். சற்று நேரத்தில் மடங்கிச் சரிந்தான் என் தோழன். பின்னர் அவர்கள் என்னருகில் வந்தனர். என்னுடல் அச்சத்தில் நடுங்கியது. என்னையும் அவர்கள் அறுக்கத் தொடங்கினர்.
அம்மா! என்ன வலி? எனக்க்கும் மட்டும் வாய் இருந்திருந்தால் என் குரல் காட்டையும் தாண்டி இப்புவி முழுவதும் கேட்டிருக்க்கும். சிறிது நேரத்தில் நானும் வீழ்ந்தேன்.
என்னவர்கள் பலர் என்னுடன் வீழ்ந்தனர். ஒருவன் என்னுடைய கிளைகளை வெட்டினான். ஒருவனை பொதுவிடத்தில் கைகால்களை வெட்டி நிர்வாணப்படுத்தி நிறுத்தினால் அது எத்தனை பெரிய அவமானம்? அதுதான் எனக்கு நேர்ந்தது. பின்னர் எங்கள் அனைவரையும் ஒரு பெரிய வண்டியில் தூக்கி வீசினர். பின்னர் பெருஞ்சத்ததுடன்
வண்டி நகர்ந்தது. விலங்குகள் எல்லாம் அஞ்சி மறைவிடங்களில் போய் அப்பிக்கொண்டன. பின்னர் காடு தாண்டி நாங்கள் நாடு புகுந்தோம். அப்பப்பா, என்ன இரைச்சல் சாலையில் மற்ற வாகனங்களின் எஞ்சின் சத்தமும் ஹாரன் ஒலியும் கேட்கச் சகிக்கவில்லை.
சற்று நேரத்திலேயே ஒரு பயங்கர துர்நாற்றம் அடித்தது. வண்டியின் பக்கவாட்டில் எட்டிப்பார்த்த போது தான் தெரிந்தது அது ஒரு சாக்கடை நதியென்பது. வெயில் கொளுத்துகிறது. இது நகரமா நரகமா எனத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் வண்டி ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்தது. ஏதோ காகிதத் தொழிற்சாலையாம்.
பேசிக்கொண்டார்கள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் எங்களைக் கொலைக்களத்திற்குக் கொண்டு சென்றனர். ஒரு இயந்திரம் எங்களை நார்நாராகக் கிழித்தது. ஏதோ குடலைப்பிடுங்கும் இராசயன வாடை அடித்தது. எது எதிலோ எங்களை அமிழ்த்தினர். பின்னர் பல கொடுமைகளுக்குப் பிறகு நான் நிறம் மாறி பலநூறு துண்டுகளாக வெளி வந்தேன். என்னை
டிஷ்யூ பேப்பர் என்று அழைத்தனர். மீண்டும் லாரி. மீண்டும் இரைச்சல். மீண்டும் நாற்றம். சிறிது தூர பயணத்திற்குப் பிறகு ஒரு உணவகத்தை அடைந்தேன். இங்கு சூழ்நிலைகள் எல்லாம் தலைகீழாக இருந்தன. அறை குளுகுளுவென்றிருந்தது.
மெல்லிய இசை பாறை மீது வழிந்தோடும் நீர் போல கசிந்து கொண்டிருந்தது. நறுமணம் வீசியது. என்னை ஒரு மேசை மீது வைத்தனர். ஒரு ஆணும் பெணும் வந்தனர். கடைக்கரரிடம் ஏதோதோ கேட்டனர். பேசிச் சிரித்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் ஏதோ உணவு வந்தது. உண்ட பின் அப்பெண் என்னைக் கையிலெடுத்தாள். மெதுவாக
என்னை அவள் இதழ் மீது ஒற்றியெடுத்தாள். பின்னர் வீசியெறிந்தாள். அவ்வளவு தான் கவனிப்பாரற்று தெருவில் கிடந்தேன். மனிதர்களும் வாகனங்களும் என்மீது ஏறி மிதித்துச் சென்றனர். பின்னர் மண்ணோடு மண்ணாக கலந்து எனது அடையாளத்தை இழந்தேன்.
எனக்குத் தோன்றியதெல்லாம் இதுதான். மனிதனின் ஒரு நிமிட சுகத்திற்காகவா இவ்வளவு நீண்ட பயணமும் இவ்வளவு அவஸ்தைகளும்? என்ன வாழ்க்கையடா இது? ஏன் இவர்களால் கைக்குட்டை பயன்படுத்திக்கொள்ள முடியாதா? மரமாகிய நாங்கள் தான் வேண்டுமா?
-------------------------------------------------------------------------------- |