ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம்
ஆனார்கள். பலர் மாண்டார்கள்.
இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான்.
இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான்.
போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன்.
இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார்.
உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார்.
அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர்.
அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான்.
ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு
ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான்.
அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை
அவ்வாறே செய்தான்.
உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது.
அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர்.
தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மன¢னர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே........ பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார்.
அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.
|