தூயதமிழ் காப்பும்
தொடர்புடைய உண்மைகளும்
மொழி ஒரு
கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு
விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு,
குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்க நெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல
வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும்
உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது. எல்லாரும் புரிந்து கொள்ளக்
கூடியவாறு இக்கருத்தைச் சான் கிரகாம் தம் நூலில் (English word-book)
விளக்கிக் கூறுகிறார்.
தமிழ்மொழி உலக முதன்மொழி என்றும் முதற்றாய்மொழி என்றும் கூறும்
தேவநேயப் பாவாணர் போலும் அறிஞர்களின் கருத்துக்களை ஏற்கத் தயங்குவோர்
இருக்கலாம். ஆனால், தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும்
மொழியறிஞர்களாகிய கால்டுவெல், இராபர்ட்டு நொமிலி, எல்லிசு,
வீரமாமுனிவர், போப், சியார்ச்சு காட்டு போன்ற பலரும் ஐயத்திற்கிடமின்றி
ஒப்புகின்றனர். அவர்களின் நடுவுநிலை மதிப்பீடுகள், தமிழ்
தனித்தியங்கவல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுறுத்துகின்றன.
இனி, தூயதமிழ் அல்லது தனித்தமிழ் என்று குறிப்பிடும் தமிழ் எது? பலரும்
கேட்கும் இக்கேள்விக்கு விடை இதுதான் : ஆரியர் இங்கு வருமுன் தமிழ்
இயற்கையாக எப்படி வழங்கியதோ அப்படி வழங்குவதே தூயதமிழ். மொழியறிஞர்
தேவநேயப் பாவாணர், “தமிழென ஒன்றும் தனித்தமிழென்றும் இருவேறு மொழிகள்
இல்லை – தமிழதுதானே தனித்தமிழாகும் தவிர்த்திடின் பிறசொல்லை!” என்பார்.
மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த தூய இனிய செந்தமிழ், ஆரியரின் வேத
மத்ததாலும், சமண, பவுத்த மதங்களாலும் தாக்குண்டு, படிப்படியாய்
சீரிழந்தது. அரசியலில் களப்பிரர், பல்லவர் அரசுகள், வடமொழிக்கே ஊக்கம்
அளித்துப் போற்றிப் புரந்தன. மாற்றார் ஆட்சியில், மொழி்யுணர்வும்
வரலாற்றறிவும் தமிழரிடை முற்றும் மறைந்த காலத்து, தமிழ்மொழியைக்
கெடுத்துப் பெருமை குன்றச் செய்யவேண்டு மென்றக் கரவான உள்நோக்கத்தோடு
தமிழில் பிறமொழிச்சொற் கலப்பு நடந்தது. தமிழரின் வழிப்பின்மையும்
நாணாமை நாடாமை நாரின்மை பேணாமையும் அதற்கு வசதியாக அமைந்தது. பின்பு,
அரபியர், பார்சியர், சீனர், போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர் தொடர்பால்
தமிழ் மேன்மேலும் கலப்புற்றது.
மொழிக்கலப்பு தமிழின் வளர்ச்சியைத் தடுத்தது. மொழிக்கலப்பும்
ஒலிக்கலப்பும் தமிழினின்று மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம்,
குடகம், துடவம், கோத்தம், கோண்டி, கொண்டா, கூய், ஒராஒன், இராசமகால்,
பிராகுவி, குருக்கு, குவீ, பர்சீ, கடபம், மாலத்தோ, நாய்க்கீ, கோலாமி
முதலிய மொழிகள் பிரிந்து வழங்க வழிவகுத்தன. இதனால், மக்களும்
பிரிந்தனர்.
தமிழிற் கலந்துள்ள பிறமொழிச்சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன்
கொண்டவையல்ல. வளமிக்க தமிழ்மொழிக்குச் சொற்கடன் தேவையுமில்லை.
மொழியறிஞர் எமினொ போன்ற பிறநாட்டு அறிஞர்கள் பலரும் தமிழின் வேர்ச்சொல்
வளம் ஈடற்றதென்றுரைப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழில் வலிந்து
பிறமொழிக் கலப்பைத் தொடர்ந்து வருகின்ற சில எழுத்தாளர்கள் நடைமுறையில்
– வழக்கில் – உள்ள எளிய தமிழ்ச்சொற்களையும் புறக்கணித்து
வீம்புக்காகவும் உள்நோக்கத்தோடும் அயல்மொழிச் சொற்களை கலந்தெழுதிக்
குழப்பி வருகின்றனர்.
வடமொழி தேவமொழி என்றும் அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது
இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும் தவறான கருத்து வலிவாகப் பரப்பப்
பட்டதால் வரைதுறையின்றி வடமொழிச் சொற்களை எவ்வகை எதிர்ப்புமின்றிக்
கண்டமண்டலமாகத் தமிழில் கலந்தெழுதும் நிலையேற்பட்டது. இந்நிலையால்,
தமிழினுடைய தூய்மையும் வளமுங் கெடவும் பெரும்பேரளவிலான தமிழ்ச் சொற்கள்
பொருளிழக்கவும் வழக்கொழியவும் நேர்ந்தது.
நன்றாக எளிதில் புரியக்கூடிய பொருத்தமான தமிழ்ச்சொற்களை விலக்கி,
அரிதான, விளங்காத, சரியாகப் பொருந்தாத வடசொற்கள் வலிய திணித்துக்
கலக்கப்பட்டதற்கான சில சான்றுகளைப் பாருங்கள் :
வலிந்து திணித்த வடசொற்கள் / வழக்கு வீழ்த்தப்பட்ட தமிழ்ச்சொற்கள்
தர்மம் /அறம்
கருணை /அருள்
நீதி /நயன்
தராசு /துலை
அங்கம் /உறுப்பு
யாகம் /வேள்வி
சந்தேகம் /ஐயம், ஐயுறவு
பயம்/ அச்சம்
தேகம் /யாக்கை, உடம்பு
சந்தோஷம், ஆனந்தம், குதூகலம் /மகிழ்ச்சி, உவகை, களிப்பு, இன்பம்
உத்தியோகம்/ அலுவல்
மைத்துனன், மச்சான்/ அளியன்
புதன்/ அறிவன்
சங்கீதம்/ இசை
ராகம்/ பண்
ஆச்சரியம /வியப்பு
அமாவாசை /` காருவா
பௌர்ணமி /வெள்ளுவா
விருத்தாசம்/ பழமலை, முதுகுன்றம்
பிருகதீசுவரர் /பெருவுடையார்
பாதாதிகேசபரியந்தம் /அடிமுதல்முடிவரை
பஞ்சேந்திரியம்/ஐம்புலன்
துவஜாரோகணம் /கொடியேற்றம்
ஹாஸ்யரசம் /நகைச்சுவை
குலஸ்திரீபுருஷபாலவிருத்த ஆயவ்ய்ய பரிமாண பத்திரிக்கை /குடிமதிப்பு
அறிக்கை (census report)
ஜன்னல் /பலகணி, காலதர், சாளரம், காற்றுவாரி
இப்பட்டியலை முடிக்கத் தனிநூலே தேவை.
பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகத் தோன்றுவதுபோல, வடசொற்களோடு கலந்த பல
தமிழ்ச் சொற்களும் வடசொற்களாகக் கருதப்படுகின்றன.
வலிந்த மொழிக்கலப்பு செய்தபோதே, தமிழ்மொழியையும் தமிழ்ச் சொற்களையும்
இழிவுறுத்தும் கொடுமையும் நடந்தது. தமிழை இழிவுபடுத்தினாலே போதும்,
தமிழர் இழிந்தவராகி விடுவர் என்ற உள்நோக்கத்துடன் இச்செயல்கள் நடந்தன.
‘சோறு’ என்பது தாழ்வென்றும், ‘சாதம்’ என்பது உயர்வென்றும், ‘நீர்’
என்பது இழிவென்றும் ‘ஜலம்’ என்பது உயர்வென்றும் மிகவலிந்த கருத்துத்
திணிப்புப் பல்வேறு வகைகளில் நடைபெற்று வந்தது. இப்போக்கு
இப்போதும்கூடச் சில இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
வடசொற் கலப்பால் தமிழரின் மொழியுணர்வு மரத்துப் போனதால் புதிது
புதிதாய் ஆங்கிலம் உருது முதலான பிறமொழிச் சொற்கள் தடையின்றிக் கலந்து
தமிழைச் சிதைக்கின்றன. தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே
போவதால், தமிழ் பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற,
வரலாறற்றக் குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.
பிறமொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்ப்பதே தமிழை வளப்படுத்தச்
சிறந்தவழி. அவ்வாறன்றிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலப்பது தமிழை
அடையாளந் தெரியாத மொழியாக்கி அழித்தொழிக்க முயலும் செயலாகும்.
தமிழ மன்னர் எதெதில் வலுவற்றவராக இருந்தாரோ அததைப் பயன்படுத்தி
அவர்களைச் செயல்திறமற்றவராக்கி, அதிகார நிலையைக் கைக்கொண்டவர்கள்,
நுண்ணுத்தியோடு தீண்டாமை உள்ளிட்ட சாதி வேறுபாட்டுக் கொடுமை இழிவுகளை
தமிழ்மக்களிடம் கடுங் கரவுணர்வோடு புகுத்தினர். மேற்கத்திய அறிஞர்
எட்கர் தர்சுட்டன் தம் நூலில் (castes and tribes of southern India)
இக்கொடுமைகளைப் பதிவு செய்துள்ளார். இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து
கொஞ்சம்கொஞ்சமாக மீண்டுவரும் முயற்சியும் தமிழின் தூய்மையைக் காக்கும்
முயற்சியும் ஓரளவு ஒப்புமை உடையனவாம்.
முன்னோர் ஆக்கிய மொழியை வளப்படுத்தற்குப் பின்னோரும் புதுச்சொற்கள்
ஆக்குதல் வேண்டும். வளர்ந்துவரும் அறிவியல்துறைச் சொற்களுக்கான
கலைச்சொற்களை தமிழியல்புக்கேற்பப் புத்தாக்கம் செய்வது இயலாதெனக் கூறி
அச்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமெனச் சிலர் கூறுகின்றனர்!
அன்றன்று தோன்றும் புதுப்புது கருத்துகட்கும் புதிதுபுதிதாக வரும்
நூல்களில் காணப்பெறும் பல்வேறு அறிவியல் துறைகளின் சொற்களுக்கும்
உடனுக்குடன் தமிழ்க் கலைச்சொற்கள் அமைக்கப் பெறல் வேண்டும்.
பிரான்சு, கொரியா, உருசியா, சப்பான், சீனா போன்ற நாடுகளில் அவர்கள்
மொழியில் நடைபெறும் இப்படிப்பட்ட வேலைகள் தமிழ்மொழியில் மேற்கொள்ளப்
படவில்லை. இந்நிலையில், தமிழிலுள்ள பல அரிய சொற்களை வழக்கு வீழ்த்தும்
பணியும் மிகக் கரவாக நடந்து வருகிறது. என்றாலும், இதுவரையில் தமிழில்
முயற்சிகளே நடக்காமலில்லை! நடந்துள்ள முயற்சிகளைச் சீர்செய்து இனி
செய்ய வேண்டியவற்றிற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பணிகளை
மேற்கொள்ளாமல், பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கண்டுபிடிக்கச்
சோம்பற்பட்டவர் பக்கத்திலுள்ள சிற்றப்பன் வீட்டில் மாப்பிள்ளை தேடியது
போன்ற வழியைக் கூறுவதா?
இன்றுங்கூட - தமிழ்வழிக் கல்வியை முறையாக நடைமுறைப் படுத்துவதோடு
தமிழ்வழியில் படித்தோர்க்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்னும்
நிலைவந்தால், புதிதுபுதிதான அறிவியல் கலைச்சொற்களோடு மளமளவென நூல்கள்
எழுதிக் குவிக்கப்படும்! தமிழ்ப் பாடநூல் நிறுவனம் முன்பு ஓரளவு
செய்ததைச் சான்றாகக் கொள்ளலாம். சீரோடு அவற்றைச் செப்பம் செய்து,
அவற்றின் துணையோடு சிறந்த கல்வியைத் தாய்மொழி வழியே தரமுடியும்.
வழக்கற்று, கிட்டத்தட்ட அழிந்தேபோன நிலையிலிருந்த தம் தாய்மொழி
எபிரேயத்தை மீட்டெடுத்துச் செப்பம்செய்து, அம்மொழிவழியே கல்விகற்றுப்
பலதுறைகளிலும் முன்னேறி வாழ்ந்துவரும் யூதர்களின் மொழிநிலையிலான
முயற்சியை நினைத்துப் பார்க்கத் தவறுகிறார்கள், வசதியாக!
எம்மொழியிலும் எல்லாமொழிப் பெயர்களும் இல்லை. சீன எழுத்தின் ஒலிப்பு
வேறு எந்த மொழியிலுள்ளது? ஒருமொழி தன் இயல்பிற் கேற்காத ஒலிகளை
ஏற்பின், நாளடைவில் அது சிதைந்து வேறொரு மொழியாகிவிடும். தமிழ் என்பதை
‘டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தமிஷ், தமிஸ்’ - என்றெல்லாம்
தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்! பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ‘ழ’
என்னும் தமிழ் எழுத்தை ஏற்கக்கூடாது என்று கேட்பதா?
தமிழர் பேச்சில் பலசொற்றொடர்கள் ஈறுதவிர முற்றும் சமற்கிருதமாகவும்
ஆங்கிலமாகவும் மாறிவருகின்றன. இந்நிலை, எழுதும்போதும் – வரிவடிவிலும் –
தொடர்கிறது. பிரஞ்சு மொழி வெளியீடுகளில் தேவையற்றுப் பயன்படுத்தப்படும்
ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் 2 ‘பிரான்’ தண்டம் கட்டச் செய்யும்
சட்டத்துக்குப் பிரான்சு நாட்டின் தலைவராயிருந்த தெ கால் வழிசெய்ததாகச்
செய்தியொன்று உண்டு. இப்படிப்பட்டக் கட்டுப்பாடுகள் சீனத்திலும் உண்டென
அறிகிறோம். மொழி வளர்ச்சிக்கு முதல்தேவை அதன் மொழிக்கலப்பற்ற தன்மையைப்
பேணிக் காப்பதே!
பிரான்சு, கொரியா, உருசியா, சப்பான் போன்ற நாடுகளில் அவரவர்
தாய்மொழியன்றிப் பிறமொழி அறியா அறிவியலறிஞர், ஆய்வறிஞர் செயற்பாடுகளைக்
குறைகூறத் துணிவார்களா? புதிதுபுதிதாக வரும் நூல்களை உடனுக்குடன்
மொழிபெயர்க்க அங்குள்ள ஏற்பாடுகளைப்போல், இங்கு எந்த ஏற்பாடும்
செய்யப்படாதது அன்றோ குறை!
இன்னுஞ் சிலர், தம் ‘இடைப்பட்ட’ ஆராய்ச்சியால் ‘பகல்’, ‘இரவு’
மொழிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிறமொழிச் சொற்களை
‘ஆக்கிரமிப்பு’ச் சொற்கள் என்றும் வளமாக்கும் சொற்கள் என்றும் பிரித்து
முதல்வகையை மட்டுமே தவிர்க்கலாம் என்கிறார்கள்! அதாவது, ‘டெலிபோன்,
டி.வி., கம்பியூட்டர்’ மட்டும் வேண்டாவாம்! ஆனால், ‘ஜாங்கிரி’,
‘ஜிலேபி’, ‘அல்வா’ அப்படியே வேண்டுமாம்! இப்படி வேறுபடுத்துதற்கான
அளவுகோலை, அன்பு செலுத்துதற்கு அவர்கள் அளவுகோல் கண்டுபிடித்துள்ளதைப்
போல, இதற்கும் கண்டுபிடித்துள்ளார்களாம்!
சில ‘மிகுமேலறிவுப் பெரும்பெரிய’ எழுத்தாளர்கள் என்று சொல்லிக்
கொள்பவர்கள், சப்பானியர்கள் அவர்கள் மொழியிலேயே பயில்கிறார்கள் என்று
வானளாவப் புகழ்கிறார்கள். ஆனால், தமிழர்கள் தமிழ்வழியிலேயேப் படிக்க
வேண்டும் என்றால் இவர்களுக்கு அருவருப்புத் தோன்றிவிடும்! தாய்நாடு
என்றால் தலையாட்டுவார்கள்! தாய்மொழி என்றாலோ தமிழ்த்தாய் என்றாலோ
இவர்களுக்கு உடலெங்கும் எரிச்சல் கண்டுவிடும்! இவர்கள் இலக்கணப்படி,
பிறமொழிகலவாது எழுதப்படும் பா, பாவே (அவர்கள் கூற்றில் ‘கவிதையே’)
அன்று!
நாட்டையும் மொழியையும் உலகமே தாயாகக் கருதுகிறது. ஆனால்,தாய்மொழிப்
பற்றும், தாய்நாட்டுப் பற்றும் இவர்களுக்குக் காமமாகத் தெரியும்!.
பாரதியைப் போற்றிப் புகழ்ந்து தள்ளுவார்கள். அந்தக் காலத்திலேயே பாரதி,
இயனறவரை தமிழில் பேசவேண்டும் என்று சொன்னதையும் பாடங்கள் அனைத்தும்
தமிழிலேயே கற்பிக்கப்படவேண்டும் என்று சொன்னதையும் கண்டுகொள்ள
மாட்டார்கள்!
ஒருமுறை, தமிழ்க்காப்புக்கென சிறு முயற்சியாக ஊர்வலம் செல்ல
முனைந்தவர்கள், இப்படிப்பட்ட ‘பெரும்பெரிய எழுத்தாளர்’ ஒருவரை
அழைத்தபோது அவர், “டோன்ட் ஒர்ரி, டமில் வில் லிவ் பார் எவர்” எனத்
திருவாய் மலர்ந்துத் தம் ஆங்கிலப் புலமையை
வெளிப்படுத்தியிருக்கின்றார்!
இவர்கள் எழுதும் சில சொற்றொடர்களைப் பாருங்கள்-
‘மிஸ் தமிழ்த்தாய்க்கு நமஸ்காரம்’,
‘நல்ல கவிதை என்றால் தனித்தமிழில் இருக்கக்கூடாது’,
‘தமிழ்ப்பற்று பொருந்தாக் காமம்’,
‘தமிழ்ப்பற்று தற்கொலைக்குச் சமம்’ .....
ஆழ்மனத்தின் அருவருப்பான நிலைகளும் பொறுத்துக் கொள்ள இயலாக் காழ்ப்பின்
பொருமலும் எரிச்சலும் தானே இவ்வாறு வெளிப்படுகின்றன!
தமிழ்மீது ‘அக்கறை’யுள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் இப்போலிகள் தங்குதடை
தயக்கமின்றிப் பிறமொழிச் சொற்களைக் கலந்தெழுதுவதை ஒட்டாரமாகச்
செய்துவருகிறார்கள். தூயதமிழ் பேணும் முயற்சி செல்லாக் காசாகிப்
போனதென்றும் அப்படி முயன்றோர் காலச்சுழியில் காணாமல் போய்விட்டார்கள்
என்றும் எழுதி மகிழ்ந்து கொள்கிறார்கள்! முழுப்பூசணிக் காயைச் சோற்றில்
மறைக்க முயலுகிறார்கள்!
நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள் தூயதமிழ்பேணும் முயற்சி தொடங்கியபோது
எழுதப்பட்டுவந்த தமிழ்நடைக்கும் தொண்ணூறாண்டுகளுக்குப் பிறகு இப்போது
பொதுவாக எழுதப்படும் தமிழ்நடைக்கும் உள்ள வேறுபாடே அம்முயற்சி கண்டுள்ள
குறிப்பிடத்தக்க வெற்றியை அவர்களுக்கு விளக்கிக் கூறும். நூற்றுக்
கணக்கான வழக்கு வீழ்த்தப்பட்ட சொற்கள் மீடகப்பட்டுப் பயன்படுத்தப்
படுவதையும், பல்லாயிரக் கணக்கான சொற்கள், குறிப்பாகப் பல்வேறு
அறிவியல்துறைக் கலைச்சொற்கள் புத்தாக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்
படுவதையும் அவர்கள் அறிய விரும்புவதில்லை!
தாய்மொழிக் காப்புணர்வுடன் தமிழர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான இம்
முயற்சியால், அரசுதுறையிலும் பொதுமக்களிடத்திலும் ஆசிரியர்
மாணவரிடையிலும் இதழ்களிலும் சிறிதேனும் நல்லதமிழ் காணப்படுவதை
ஒப்பத்தானே வேண்டும்!
கீழ்க்காணும் வரிகள் 1920-இல் ஒரு தமிழ்ப் பாவலர் ‘தேசியக்கல்வி’ என்ற
கட்டுரையில் எழுதியவை.
“தமிழ்நாட்டில் தேசியக்கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகரமுதல்
னகரப்புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ்பாஷையில் நடத்த
வேண்டும் என்பது பொருள்.
ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள்
ஸ்தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக்
கற்பிக்கப் படுவதுமன்றிப் பலகைக் குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே
பெயர் சொல்லவேண்டும். ‘ஸ்லேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக்கூடாது.
.............................................................
மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை. இது
ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ‘அவயவி’ சரியான வார்த்தை இல்லை.
‘அங்கத்தான்’ கட்டிவராது. ‘சபிகன் சரியான பதந்தான். ஆனால்,
பொதுமக்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள்
கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம்
யோசித்துப்பார்த்தேன். ‘உறுப்பாளி’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும்
மனத்திற்குப் பொருந்தவில்லை, என்னசெய்வேன். கடைசியாக ‘மெம்பர்’ என்று
எழுதிவிட்டேன். இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள்
கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன். .........
தமிழ்நாட்டில் முழுதும் தமிழ்நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை
எழுதும் விநோதமான பழக்கம் நம் பத்திராதிபர்களிடம் காணப் படுகிறது.”
மேலே கண்ட பகுதியை எழுதியவர் பாவலர் சுப்பிரமணிய பாரதியே!
இப்படிப்பட்ட மணிப்பவள நடையை இப்பொழுது ஒருவர் எழுதினால், அவர்,
தமிழ்மொழியில் வேண்டுமென்றே வீம்புக்காக வடசொற்களைக் கலந்து
எழுதுகிறார் என்று கூறுமளவிற்கு இன்றைக்குத் தூயதமிழ் பேணும் முயற்சி
முன்னேற்றம் கண்டுள்ளதெனக் கூறலாம்.
முழுமையான வெற்றிபெற இன்னும் தொலைவு உள்ளதென்பது உண்மை. ஆனால்,
தூயதமிழ் பேணும் முயற்சியே தமிழ்மொழியைக் காக்கும் என்பதும் தமிழை
வளர்த்தெடுத் துயர்த்த இன்றியமையாத தென்பதும் உறுதியாகும். தூயதமிழ்
காக்கும் முயற்சி மட்டும் இல்லாதிருந்தால், இருபதாம் நூற்றாண்டில்
இன்னுமொரு மலையாளம் தோன்றியிருக்கும்! சில கோடித்தமிழர்கள் இன்னொருவகை
மொழியினத்தவராக மாறியிருப்பர் என்றால் மிகையுரையன்று, உண்மையே!
பிறமொழிக் கலப்பால் தமிழ்வளமும் தமிழரின் நலமும் கேடுற்றுள்ளது; தமிழர்
வாழ்வியலும் பண்பாட்டுக் கூறுகளும் சிதைவுற்றுவிட்டன. தூயதமிழைக்
காப்பது தமிழரின் நலன்களில் கருத்துச் செலுத்துவதாகும்! தமிழின்,
தமிழரின் மீட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் பாடுபடுவதாகும்!
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
-----------------------------------------------------------------------------------------
நன்றியுரைப்பு :-
மறைமலையடிகளார்,
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்,
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர்க்கும்
ஏனைத் தமிழ்மீட்சி முயற்சியாளர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி!
-----------------------------------------------------------------------------------------
நன்றி
-
தமிழநம்பி |