Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 November 24, 2009

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

வெறியாட்டு

 

இது ஒரு அகத்துறையாகும். அகவாழ்வில் நிகழ்த்தப்படும் கூத்தாக இவ்வெறியாட்டு சிறப்பிக்கப்படுகிறுது.


அகவாழ்வில் தலைவனின் பிரிவால் தலைவிக்கு உடல் மெலிவு உள்ளிட்ட மாறுபாடுகள் தோன்றும்.
அதனைக் கண்டு செவிலித்தாய், நற்றாய் உள்ளிட்டோர் இம்மெலிவு தெய்வத்தால் நேர்ந்த குறை என்று கூறுவர். அதற்காக முருகனுக்குப் பூசை செய்து இக்குறையைப் போக்க முயல்வர்.

இரவில் பூசை தொடங்கும் வேலன் என்னும் பூசாரி தினையை குருதியில் கலந்து எறிந்து முருகனைக் கூவி அழைப்பான். கழற்சிக் காயிட்டு தலைவிக்கு வந்த நோய்க்கு முருகனே காரணம் என்று உரைப்பான். இதுதான் வெறியாட்டு ஆகும்.

காட்சி -1.

இப்படி ஒரு தலைவிக்கு அவளின் உடல் மாறுபாடு கண்டு வெறியாட்டு எடுத்தனர். வழக்கம் போல வேலனாக வந்த மலைநாட்டுப் பூசாரி தலைவியின் மெலிவுக்குக் காரணம் முருகன் என்று கூறுகிறான்.


சினம் கொண்டாள் தலைவி. தன் மெலிவுக்குக் காரணம் தலைவன் என்பதை அறிந்த முருகக் கடவுளே பூசாரி அழைத்தான் என்று வந்துவிடுவதா?


கடவுளாகவே இருந்தாலும் தன்னறிவு வேண்டாமா? என்று கடவுளாகிய முருகனையே நொந்து கொள்கிறாள்.


சரி வந்தது தான் வந்துவிட்டாய் இனிமேலாவது இது போன்ற இடங்களுக்கு வராதே என்று முருகனிடம்
உடன்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்கிறாள் தலைவி.இதனை,

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக,
மடவை மன்ற, வாழிய முருகே!

பிரமசாரி என்னும் புலவர் நற்றிணையில் விளக்கியுள்ளார்.



காட்சி – 2

தலைவி தலைவனின் பிரிவால் உடல் மெலிவுற்றாள். அது கண்டு பெற்றோர்; வெறியாட்டு எடுத்தனர். அதனால் தோழி தலைவனை நொந்து கொண்டாள். அச்சூழலில் அயலே தலைவன் வந்து மறைந்து நின்றான். அப்போது தலைவி கூறுவதாக இப்பாடல் உள்ளது.

'அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய் தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?

- வெறிபாடிய காமக்கண்ணியார்
என்பது வெறியாட்டை உணர்த்தும் பாடலாகும்.இப்புலவருக்கு இப்பாடலின் சிறப்புக் கருதி வெறிபாடிய காமக்கண்ணியார் என்னும் பெயர் நிலைபெற்றது.

இப்பாடலின் பொருள்,

தோழி…..
மலை உச்சியிலிருந்து வீழும் அருவிக்கூட்டங்களைக் கொண்ட காடு பொருந்திய நாட்டையுடையவன் தலைவன். அத்தலைவன் என்னைத் தழுவிப் பிரிந்ததால் எனக்கு உடல் மெலிவு ஏற்பட்டது. அதனை அறியாது என் பெற்றோர் வெறியாட்டு எடுத்தால் இத்துன்பம் தீரும் என எண்ணுகின்றனர். வேலனும் (மலை நாட்டுப் பூசாரி) வெறியாடும் களத்தை நன்கு அமைத்து முருகனுடைய வேலுக்கு மாலை சூடினான்.


சத்தமாகப் பாடிப் பலி கொடுத்தான். அழகிய சிவந்த தினையினை குருதியுடன் கலந்து தூவி முருகனை
வருமாறு அழைத்தான்.

அச்சம் பொருந்திய அந்நள்ளிரவில் பல மணமிக்க மலர்களை அணிந்த தலைவன், வலிமையான களிற்றைத் தாக்க வரும் புலியின் பார்வையோடு யாரும் அறியாவண்ணம் என்னைக் கண்டு தழுவிச் சென்றான். என் உடல் மெலிவும் நீங்கியது.

இவ்வாறு என் உடல் மாற்றத்துக்கான காரணத்தை அறியாது வெறியாட்டெடுக்கும் பெற்றோரின் செயலால் சிரிப்புத் தான் தோன்றுகிறது என்கிறாள் தலைவி.


காட்சி – 3

சிறைப்புறமாகத் தலைவன் நிற்க அவன் தலைவியை வரைந்து கொள்தல் எண்ணித் தோழி கூறுவதாக இப்பாடல் உள்ளது.

“ தலைவிக்கு ஏற்பட்ட உடல் மெலிவுக்குக் காரணம் தெய்வக்குறை என எண்ணி வெறியாட்டு எடுக்கின்றனர் பெற்றோர்.

தலைவியின் உடல் மெலிவுக்குக் காரணம் நானனல்ல, ஒரு தலைவன் என்று முருகக் கடவுள், தாய்க்குக் குறிப்பாலோ, கனவிலோ உணர்த்தினால் என்ன? என்று தோழி தலைவியிடம் கேட்பதாக இப்பாடல் அமைகிறது.


இதன் வாயிலாக தலைவன் தலைவியின் நிலையறிந்து வரைந்து கொள்வான் என்பது கருத்தாகும்.


சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்,
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி,
வெறி என உணர்ந்த அரிய அன்னையை,
கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய்
என்னினும் வாராது; மணியின் தோன்றும்
அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின்,
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?-
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே.


சங்க கால வெறியாட்டு மரபு அப்படியே சிற்றிலக்கியங்களிலும் காணமுடிகிறது.

முத்தொள்ளாயிரத்தில் ஒரு தலைவியின் உடல் மெலிவு கண்டு இதே போல வெறியாட்டு எடுக்கின்றனர். அதனை,


“காராட் டுதிரம் தூஉய் அன்னை களன்இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! -போராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதேக்கென்
நெஞ்சங் களங்கொண்டநோய்!“ ( முத்தொள்ளாயிரம் 11)
இப்பாடல் உணர்த்துகிறது.

வேலன் வருகிறான் காராட்டை பலிகொடுத்து, அழகான வெறியாட்டக் களம் அமைத்து என்னை நீராட்டி எனக்கு வந்த நோயோ நீங்கிப் போ என்று சொல்கின்றனர். என் தலைவனால் என் நெஞ்சில் களம் கொண்ட இந்நோய் வெறியாட்டு எடுத்து நீராடுவதால் நீங்கிச் செல்லும? என்று அவர்களின் செயல்கண்டு தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறாள்.

இன்றைய காலத்திலும் கிராமங்களில் பெண்களுக்கு ஏற்பட்ட உடல் மாறுபாடுகளைக் கண்டு பேய் ஓட்டுகிறேன் என்று கோடாங்கியிடம் சென்று பூசை நடத்துவதுண்டு.

பெண்களுக்கு மனதில் ஏற்பட்ட மன அழுத்தமே அவர்களின் உடல்மாறுபாட்டுக்கு அடிப்படைக் காரணமாகும்.அதனை அறியாது சங்க காலத்தில் வெறியாட்டு எடுத்தனர். அடுத்து வந்த காலத்தில் பெண்ணுக்குப் பேய்தான் பிடித்திருக்கிறது என்று எண்ணி பேய் ஓட்டினர்.

ஆனால் சங்க காலத்தில் வெறியாட்டு, தலைமக்கள் களவு வாழ்விலிருந்து கற்பு வாழ்வுக்கு மாற அடிப்படையான ஒன்றாக இருந்தது. இது போன்ற சூழல்களில் தலைவியைக் காண வரும் தலைவனிடம்
தோழி பேசுவாள்,பார்த்தாயா? தலைவி எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறாள் என்று அதனால் விரைவில் மணந்து கொள் என்று வரைவு கடாவுவாள்..



-----------------------------------------------------------------------------------------
 

நன்றி  -   முனைவர் இரா.குணசீலன்

முனைவர் இரா.குணசீலன் அவர்களின்  இதர படப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]