முருகன் பிள்ளைத்தமிழ்
1. காப்புப் பருவம்
“சோ” வென்று கொட்டுமழையே - கொடி
மின்னலுடன் இடிக்கின்ற் இடியே – தமிழ்ப்
'பா' வொன்று கேட்டிட காவலனாய் வந்திட்ட அரசே
இன்னல் ஏதுமின்றி காத்தருளே
'ஆ' வென்று அழுதுகொண்டே பிறக்கவில்லை என்றாலும்
அனைத்து சக்தியும் ஒன்றாகத் திரட்டி
“சே” யென்று பிறந்திட்டான் எங்கள் குமரன்
உனைத்தான் வேண்டுகின்றோம் உள்ளம் ஒன்று பட்டு
'கா' வென்றே தாள் வீழ்கின்றோம், காத்தருளே!
இறைவா காத்தருளே!
2. செஙகீரைப் பருவம்
தங்கத்தை மெருகூட்டிச் செய்த
பொன்னுரு
கொண்டு தமிழே ஆகிவிட்ட
மங்காப் புகழ்கொண்டு மாவரக்கன் தனை ஒழித்து
தேவர் துயரம் போக்கிவிட்ட
சிங்கத்தின் வீரமே சிறுகுழந்தையே!
செங்கீரை ஆடி அருளே!
தங்கவைத்தால் நினைத் தன்னுள்ளத்தில்
என்ன வந்தாலும் அருள் புரியும்
பொங்குமா கடலே, பொதிகைத் தென்றலே
செங்கீரை ஆடி அருளே!
3. தாலப் பருவம்
பொதிகைச் சந்தனத்தின் மணம்
கூட்டி
குறு முனிக்குத் தமிழை
ஓதிவிட்டு உலகெங்கும் தவழவிட்டாய் தமிழ்த்தாயை
எங்கள் தாய்க்கும் தாயாகிவிட்டவனே
தாதியர் தாலாட்டுகின்றார், தங்கத் தொட்டிலிலே
தாலேலோ, தாலேலோ!
யாரதிகம் போட்டியில் பிரமனை, மாயவனைத்
திகைக்க வைத்து தானுயர்ந்த தந்தைக்கும்
நீயதிகமாகி மந்திரத்தை சொல்லவந்த திருக்குமரா
தாலேலோ, தாலேலோ!
4. சப்பாணிப்பருவம்
ஒரு பழத்திற்கா உலகைச் சுற்றி
நீ
வருகையில் உன் தமையன் -- யானை
உருக் கொண்ட முதல்வன் தாய் தந்தையரை
ஒருமுறை வலம்வந்து வாங்கிக்கொள்ள - (கோபமே)
உருவாகி குன்றில் குடிபுகுந்த குமரா!
சப்பாணி கொட்டியருளே!
அருளுவதில் அடியார்க்கும் அடியவனே
தொண்டாற்றும் தலைவா!
மருவில்லாத் திருவே! மாணிக்க வேலவனே
சப்பாணி கொட்டியருளே!
5. முத்தப் பருவம்
கடலிடைக் குளித்து கடலாழம்
கண்டு
கொண்டுவரும் முத்து
மடலிடை வெள்ளமென 'கட கட' வென்று
காதலியர் சிரிக்க வந்துதிரும் முத்து
அட, அத்தனை முத்தும் கண்டாலும்
நின்னொரு முத்தம் சுவைத்திட்டால்
தேடவும் வேண்டுமோ தெய்வலொக அமுதே
முத்தமிழே முத்தமருளே!
தடந்தோள் குமரா! ஆறு முகனே!
அழகான முத்தமருளே!
6. வருகைப் பருவம்
வள்ளிக் குறத்தி தனை மண்ந்திட
மரமாகி வயதான கிழவனுமாகி
இல்லாத நாடக மெலாம் ஆடவந்த
திருவருளே! வந்தருளே!
பொல்லாத உலகினிலே நல்லோர் படுந்துயரம்
இல்லாமல் செய்வதற்கு
சொல்லாமல் சொல்லி வந்த குணக்குன்றே
வருக, வருக, வருக
நில்லாமல் வருக அருள் புரியவே
வருக, வருக, வருகவே
...............................................................................................................
அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
(தொடரும்)
நன்றி
கண்ணபிரான்.G
|