அதிகாலைப் பொழுது
ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன் நான்
அவனும் தயாராகி இருப்பான்
ஆரம்பமாகப் போகிறது எங்கள் ஊர்வலம்
தெருவுக்கு வந்து விட்டேன் நான்
தூரத்தில் காத்திருக்கிறான் அவன்
பெருமையோடு முன்னே நடக்கிறேன் நான்
பின் தொடர்ந்து வருகிறான் அவன்
இதோ ஆரம்பம் எங்கள் பயணம்
இனிவரும் ஒருமணி நேரம்
என் அருகில் எனக்கு எதிரில்
என் நிழலின் அருகில் கூட
எவரும் நெருங்கி வரமுடியாது
வாசல்வரை கொண்டு சேர்த்தபின் அவன்
விலகித் தன்வழிப் போய்விடுவான்
பத்து வருடமாய் தொடரும் நட்புக்கு
பதிலுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்
இத்தனை நன்றி காட்ட நான்
இவனுக்கு என்னதான் செய்துவிட்டேன்
முன்னம் ஒருநாள் இரவில்
சின்னஞ்சிறிய தாள் அளவில்
ரொட்டித் துண்டை வீசியதிலிருந்து
ஒட்டிக் கொண்டான் அன்றிலிருந்து
வீட்டிலும் வளர்க்கிறேன் நாய் ஒன்றை
வாசலைத்தாண்டி நான் வந்தவுடன்
வாலை லேசாய் ஆட்டி
காலை வாகாய் நீட்டி
கண்ணை லேசாய் சிமிட்டி
கவிழ்ந்து படுத்துக்கொள்ளும்
திடீரெனத் தடைபட்டது என் சிந்தனை ஓட்டம்
தெரு முனையில் அவனின் அலறல் சத்தம்
சுறுக்கு வலையில் சிக்கி அவன்
சுற்றிலும் நாய் பிடிக்கும் ஊழியர்கள்
ஒன்பதுபேர் இருந்தாலும் கூட
ஒருவராலும் நெருங்க முடியவில்லை
என்னைப் பார்த்தவுடன்
எப்படியும் காப்பேன்
என்ற எதிர்பார்ப்போடு
எதிர்த்து போராடாமல்
ஏக்கத்தோடு நிற்கிறான்
அமைதியாய் நிற்கிறேன் நானும்
அடுத்து என்ன செய்யவேண்டும்
அமைதியான அவனை அப்படியே
அடித்துத் தூக்கி கூண்டிற்க்குள் அடைக்கும்
அவர்களிடம் விடச் சொல்லிக் கேட்கலாமா?
அல்லது அப்படியே விட்டு விடலாமா?
இந்தப் பெரிய மனுசனுக்கும் தெரு நாய்க்கும்
இது என்னய்யா தொடர்பு என
ஏளனமாய்ப் பேசிவிடுவார்களோ?
என்வீடுவரை சொல்லிவிடுவார்களோ?
அமைதியாய் கூண்டுக்குள் நிற்கிறான் அவனும்
ஆயிரம் அதிர்ச்சி தெரிக்கிறது அவன் முகத்தில்
பலவருடம் பாதுகாத்த அவனுக்காக
சில நொடிகூட போராடாத என்முகத்தில்
இன்னும் எதையோ எதிர்பார்த்து
இமைக்காமல் தேடிக்கொண்டிருக்கிறான்
வண்டி அவனோடு மெல்ல நகர்ந்து
சின்னப் புள்ளியாகித் தொடர்ந்து
கண்ணிலிருந்து மறைந்ததே போனது
அவன் பார்வையிலிருந்தும் நான்
அர்த்தமில்லாத ஒற்றை புள்ளியாகி
அசிங்கமாகி மறைந்தே போய் இருப்பேன்.
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி.
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில்.