அவள் அப்படி ஒன்றும்
அழகில்லை...
எட்டரை
மணி பேருந்துக்கு,
எங்கோ வெறித்தபடி காத்திருந்தேன்,
வேகமாய் ஓடி வந்தாள்,
அவசரத்தில் சற்றே கோணலான
முன் தலை வகிடும்,
உச்சி விட்டு உயர்ந்து நின்ற
சில கற்றை மயிரும்,
ஓரத்தில் அழுக்கடைந்து கருத்துப்போன
சிகப்பு ரிப்பனும்,
உட்காரும் இடத்தில் பொத்தலிட்டு தைத்த,
சீருடை சுடிதாரும்,
வாயகன்று பல்லிளித்த
புத்தகப் பையும்,
ஊக்கு குத்தி சரி செய்த
ஒருக்கால் செருப்பும்,
கன்னம் தொடங்கி கழுத்துவரை
படர்ந்திருந்த வியர்வைத்துளியும்,
காதோரத்தில் வெள்ளைத் திட்டாய்
முகப் பவுடரும்,
காசிக்கயிறு வளையலும்,
பாசி மணி மாலையும்,
முன் தெற்றுப்பல்லும்,
ஒட்டிய கன்னமும்,
வற்றிய மார்பும்,
ம்ம்ம்...
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...,
என்னைத்தவிர வேறு யாருக்கும்..!
நன்றி
சிவாஜி சங்கர் |