சனிக்கிழமை இன்று
சாயங்கால நேரம்
தனித்தனியாய் இருக்கும் நண்பர்கள்
இனிதாய் சந்தித்துக்கொள்ளும் நேரம்
சுழற்சி முறையில் நண்பர்களுக்காக
சும்மா செலவு செய்யும் நாள்
இதோ கிளம்புகிறேன் நான்
அதே கிழக்குகடற்கரைச் சாலை
மதிமயக்கும் மாலை விருந்தின்
மொத்தச் செலவும் என்னுடையது
அதிகமாய் இரண்டாயிரம் ஆகலாம்
ஆனாலும் அதுபற்றிக் கவலையில்லை
இரண்டு லட்சம் சம்பாதிக்கிறேன்
இதற்கென நண்பர்களுக்கென
இருபதாயிரம் செலவு செய்யலாம்
இருந்தாலும் அதிலொன்றும் தப்பேயில்லை
பளபளக்கும் புத்தம் புது
சலவை நோட்டுகளில் பத்தை
சட்டைப் பைக்குள் வைக்கிறேன்
சாவி எடுத்துக் கிளம்புகிறேன்
பணத்தைப் பூட்டி வைக்காமல்
பள்ளத்தில் பதுக்கி வைக்காமல்
புழக்கத்தில் பறக்க விடும்
பரோபகாரிகள் நாங்கள்
நண்பர்கள் படை சூழ
நெடுநேரம் கும்மாளமிட்டு
ஆள் தவறாமல் கும்மியடித்து
நல்லபடியாய் முடிந்தது விருந்து
ஒவ்வொருவராய்க் கிளம்பிச் செல்ல
ஒருவழியாய் வந்துசேருகிறது பட்டியல்
எதிர்பார்த்தபடியே இரண்டாயிரத்து சொச்சம்
எண்ணி முழுநோட்டுக்களை வைக்கிறேன்
மிச்சம் வரக் காத்திருக்கிறேன்
மீதிப் பணத்தையும் பட்டியலையும்
மேசைமேல் வைத்துச் செல்கிறார் அவர்
மனம்போல அன்பளிப்பு வைக்கிறேன்
அப்போதுதான் கவனிக்கிறேன்
மீதம் இருக்கவேண்டியதோ நூறு
முன்னால் இருப்பதோ முன்னூறு
சுற்றும் முற்றும் கணிக்கிறேன்
சுருட்டி பையில் வைக்கிறேன்
அவசரமாய்க் கிளம்புகிறேன்
அலுவலகம் வந்து சேர்கிறேன்
அதன்பின்தான் யோசிக்கிறேன்
ஏதோ தவறுதலாய் உணர்கிறேன்
எடுத்திருக்கக் கூடாதோ????
கொடுத்திருக்க வேண்டுமோ!!!!!
அன்புடன்
துரை, தூத்துக்குடி