எப்படி மறப்பேன்
என்னவளே.?!..
ஊடலின் உச்சத்தில்,
பரிகாச வார்த்தைகள்.!,
கூடலின் மிச்சத்தில்,
கூந்தற் பூ வாசங்கள்.!,
உள்ளங்கை வெட்கத்தில்,
சிவந்து போன மருதாணி.!,
சீலைத்தலைப்பில் என்னை கிடத்தி,
இரண்டாம் தாலாட்டு.!,
கழுத்தூறும் வியர்வைத்துளி
முன்னேறாமல்..,
துடைத்துத்தடுத்த முந்தானை.!,
கதை சொல்லி தூங்கிய பின்னும்
கடைக் கண்ணில் குட்டி விழிப்பு.!,
அக்குளில் அழுக்குப் பதியம்..,
ஆயிரம் பூவாசம்.!,
விரல் பிடித்து நகம் கடிக்கும்
விசித்திரத்தாய்மை.!,
குறுந்தாடி மழித்தெடுக்க.,
நுரை போடும் தோழமை.!,
எழுதிய கவிதையில் பிழைதிருத்தும்
முதல் ரசனை.!,
தேவை தெரிந்து சேவை செய்யும்
கண் கருணை.!,
நீயழுது நானழுதால் துடைக்கவரும்
பத்துவிரல்.!,
விலகிய நாட்களெல்லாம் விலக்காமல்.,
கட்டியணைத்து தூங்கும் காதல்.!,
தூக்கத்தில் சட்டென விழித்தால்.,
தலைமாட்டில் செருப்புவைக்கும்
பழகிய பாசம்.!,
வாசல் வரைவந்து என்னாடை சரிசெய்து
முத்தமிட்டு வழியனுப்பும்.,
அவசியமான அக்கறை.!,
சனிக்கிழமை எண்ணைக்குளியல்.,
சாப்பாட்டில் கீரைத்துவையல்.,
மதியவுணவு மீதம் வந்தால்
தலையில் குட்டும் இரண்டாம் தாய்மை.!,
ஏகத்துக்கும் என்னைப்புகழும்
என் பக்தை.!,
ஆசைப்பட்டு ஒன்றைக்கேட்டு.,
செலவாகும் வேண்டாமெனும் குடும்பத்தனம்.!,
காயத்திற்கு மருந்து கட்டு.,
நெற்றியில் திருநீற்றுப்பொட்டு.,
இரவெல்லாம் தூங்காமல்..
வைத்தியம் பார்க்கும் பைத்தியக்காரி.!,
என் பசிபோகப்பரிமாறி.,
பட்டினி கிடக்கும் பத்திநித்துவம்.!,
சாக்காலப்படுக்கயிலும் - என்னை
குளிப்பாட்டும் கடைசி செவிலி.!,
எப்படி மறப்பேன் என்னவளே..,
எப்படி மறப்பேன்..?!!
நன்றி
சிவாஜி சங்கர் |