உன்னைப்போல் ஒருவன்..
01.
நான் அழுதால்
அழவும்
சிரித்தால் சிரிக்கவும்
மெலிதாய் புன்னகைத்தால்
எந்த சலனமும் இன்றி புன்னகைக்கவும்
வக்கிரத்தோடு பார்த்தால்
அதே வக்கிரத்தோடு அவனும்
சில நேரங்களில்
என் கோபங்களையும்
சில நேரங்களில்
என் இரக்ககுணத்தையும்
பிரதிபலிப்பதாய்
என்னைப்போலவே ஒருவன்
என் பயணங்களோடு பயணிக்கிறான்!
அதிகாலை ஒப்பனையிலிருந்து
அந்திமத்தில் வீடு திரும்பும் வரை
எதிர்படும் கண்ணாடிகளில்
அவனைக்காண்பதுண்டு .....
உங்களைப்போல் ஒருவனை
நீங்களும் சந்தித்திருக்கலாம் தானே?
02.
நவீனத்துப்பாக்கிகளினாலும்
சக்திவாய்ந்த குண்டுகளினாலும்
சிதைக்கப்படும்
எதிர்ப்பார்ப்புகளின் குருதி
நாளைக்கான
எதிர்நோக்கும் திறனை
சொட்டிவிட்டுத்தான் மரணிக்கின்றன!
கொஞ்சநேரம் செவிசாய்த்து
கேட்டுப்பாருங்கள்
நீங்களும் உணரலாம்!
03.
தினம் மலரும்
பூக்கள் தொடங்கி
ஒருநாள் வாழும்
ஈசல்பூச்சி வரை
எதாவதொரு வாழ்க்கைத்தத்துவத்தை
எனக்கென சொல்லியே மடிகிறது...
நீங்களும்
அதை கவனியுங்கள்
அது உங்களுக்குமாய்..........
04.
ஒதுங்க இடமில்லாமல்
அங்குமிங்கும் அலைபாயும்
கண்ணீர்கலந்த மழையை
மட்டும் எப்போதும்
ரசிக்கவே முடிவதில்லை...
நீங்களும்
ரசித்திருக்க வாய்ப்பில்லையெனவே
ஆழமாய் நம்புகிறேன்!
05.
பேருந்தின்
இருக்கைக்காக முதுமையின்
இயலாமையை
தோற்கடித்துவிட்ட
பயணங்கள் என்னைப்போலவே
உங்களாலும்
ரசிக்கவியலாமல் போகலாம் தானே?
06.
உலகின்
எதோவொரு மூலையில்
ஏற்படும் மரணங்கள் கூட
உறக்கத்தில் சலனமேற்படுத்துமெனில்
உங்களைப்போலவே
நானுமென்பதில் ஆச்சர்யமேதுமில்லை....
07.
அரசியல்
ஊழல்
லஞ்சம்
இவைகளை தினசரியில்
படித்துவிட்டு
உங்கள் தினசரி வேலைகளை
சலனமில்லாமல் தொடங்கினால்
நீங்களும் நானும்
ஒருமித்தவர்களே!
08.
அழுகை
புன்னகை
தவழ்தல்
தடுமாறுதலென
ஆருத்ராவின் குழந்தை
உலகில் போய் வாழ்ந்தால்
உங்களைப்போலவே
நானும் வாழ்கிறேன் என்பதே நிஜம்!
நன்றி
தணிகை.ஜெ |