மழை!!
*உன்னையும், என்னையும்,
ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்கிறது..
மழை.!!
*உன் தேகச்சூட்டில் ஆவியாய் போயின
மழை நனைத்த ஈரம்..
*"ச்சோ" வென பெருமழை
குடைவிரித்தாய் நீ...
குடைமீது கோபம் போல
நின்றுபோனது மழை
*மழைநீரில் காகிதகப்பல்
என்காதல் உரைத்தபடி
உன் வீட்டு முற்றத்தில்..
*மழைபட்டு கரைந்து போனது..
உன் கண்ணிமை மையும்,
நெற்றிப் பொட்டும்
கொஞ்சம் என் மனசும்...
*இடி இடித்தால் இறுக கட்டிக்கொள்கிறாள்..
இன்னும் ஓர் இடியனுப்பேன்..,
அர்ஜுனா..! அர்ஜுனா..!
*கன்னக்குழி நிறைத்து.,
நெஞ்சுக்குழி வழிந்து.,
மோட்சம் பெற்றது...
மழை.!!
*நிலவில் மழை உண்டாம்..
சமீபத்திய ஆராய்ச்சி.,
நிலவே மழையில் நனைந்தது..
அதற்கு நான் சாட்சி.!!
*பேரிடி விழவாய்ப்புண்டாம்...
மின்கம்பி அறுந்து கிடக்கலாம்..
சகதியில் கால் இடரக்கூடும்...
ஆதலால்.,
என்னை இறுக கட்டிக்கொள்ளேன்.
*மழையில் குதுகலித்து
குழந்தையாய் நீ..
உன் இச்சை தனிக்கும் பொம்மையாய்
மழை.!!
*மாலை, மழை, நீ..
வள்ளுவனுக்கு வாய்க்கவில்லை....
உன் காலத்துக்கு கவிஎழுத.!!
*மழைக்கு ஒதுங்கி நிழற்குடையில்
நீ..
சாரலாய் உன் பாதம் நனைத்து
பிறவிப்பயன் அடைந்தது
மழை.!!
நன்றி
சிவாஜி சங்கர் |