Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 December 11, 2009

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

பாலைக் கலியில் உளவியல்

 


மனிதமனமே வாழ்க்கைக்கு அடிப்படை. நமது எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் உறைவிடம் இதுவே. எப்பொழுதும் ஏதாவதொரு சிந்தனையில் மூழ்கி அமைதியடையாத இந்த மனதைப்பற்றி,

சொல்லால் மவுனம் மவுனம் என்றே

சொல்லிச் சொல்லிக் கொண்டது

அல்லால்,மனம் அறப் பூரண

நிட்டையில் ஆழ்ந்தது உண்டோ?

என்று வினா எழுப்புகிறார் தாயுமானவர். ஏன் கற்றறிந்தோரும் சமயவாதிகளும் கூட மனம் என்பது இன்னதுதான், இத்தன்மையது தான் எனச் சொல்லமுடியாத, வரையறுக்க முடியாத நிலையைக் காணலாம்.


உளவியல்

மனிதமனத்தின் செயல்பாடு மற்றும் மனிதனின் நடத்தை பற்றிய அறிவியல் கல்வியே உளவியல் என வரையறுக்கப் படுகிறது.மனதின் செயல்பாடு என்பதில் மனிதனின் சிந்தனை, நினைவு, கனவு, உள்ளுணர்வு, நம்பிக்கை ஆகியவும் அடங்கும் என்பர் உளவியலர்.

ஆங்கிலத்தில் சைக்காலஜி(psychology) எனும் சொல் உளவியல் என்கிற தமிழ்ச்சொல்லுக்கு நேரானது.சைக்கி(psyche) லோகஸ்(logue) ஆகிய இருசொற்களின் கூட்டாக சைக்காலஜி என வழங்கப்படுகிறது.சைக்கி என்பது ஆன்மாவைக் குறிக்கும் கிரேக்கச்சொல்லாகும்.இந்தச் சொல்லை முதன்முதலாக ருடோல்ப் கியோக்கல் பயன்படுத்தினார்.1


உளவியலும் இலக்கியமும்

உளவியல் எனும் அறிவியலும் இலக்கியம் எனும் சிறந்த கலையும் எவ்வகையில் ஒன்றுபட இயலும்! “இரண்டுமே மனிதனுடைய அகநிலையைச் சார்ந்தவை.அவனுடைய செயல்நோக்கங்கள், நடத்தை மற்றும் குறியீடுகளை உண்டாக்கி உபயோகிக்கும் அவனுடைய திறனைப் பற்றியே பேசுகின்றன. மேலும் உளவியலாளர் மனிதஉள்ளத்தையும் அவனுடைய நடத்தையையும் பகுத்தாய்ந்து விளக்க,படைப்பாளியோ பகுப்பாய்வுக்கு முதன்மை தராது மனிதனை மனிதனுக்கு உணர்த்தவேண்டும் என்ற நோக்குடன் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் மனிதனுடைய நடத்தை பெறும் மாறுபாடுகளையும் சுட்டிக்காட்டுவர்.2


பாலைக்கலியில் உளவியல்

இலக்கியப் படைப்புகளில் வரும் அவலக்கூறுகள், அவற்றை விரும்பிப் படிக்கும் வாசகர்கள் என்பனவற்றைக் காணும்போது அவலங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள மனம் கையாளும் ஒருஉத்தியாகவே கருதலாம்.பொருள் வேட்கை கொண்ட தலைவன், தலைவியை விட்டுப்பிரிய தலைவியானவள் தலைவன் செல்லும் வழியில் எதிர்ப்படும் ஆறலைக் கள்வர்களை நினைத்தும் தன்தனிமைத் துயரை நினைத்தும் வருந்த,தலைனோ பொருள் நிலையற்றதெனினும் இல்வாழ்வு நடத்துவதற்குப் பொருள் தேவைப்படுவதால் தலைவியைப் பிரிந்தும் பாலையில் எதிர்ப்படும் விலங்குகளின் அன்புச்செயலைக் கண்டு தலைவியை நினைந்து வருந்த, தலைவனும் தலைவியும் நல்லூழ் வினையால் பாலைவழிச் செல்ல அவர்களைக் காணாத செவிலியின் உள்ளத்துயரமும் ஏற்படும் நிலம் பாலைநிலமாகும். எனவே,இப்பாலை நிலத்தில் ஏற்படும் மாந்தர்களின் உள்ளஉளைச்சலை உளவியல் வழிக் காணலாம்.


உள்ளமுறிவு

உள்ளமுறிவு என்பது விரும்பிய இலக்கினை அடைவதில் நேரும் தடைகளாலோ குறுக்கீடுகளாலோ நேரிதான குறிக்கோள் ஒன்று இன்மையாலோ விளைவதாகும் என உளவியலர் விளக்குவர். ஓர் அழுத்தமான தேவையும் அதனை எய்தி நிறைவுற இயலாத உணர்வும் உடனியையும் போது நேரும் அனுபவமே உள்ளமுறிவு என்று பிரித்தானியக் கலைக்களஞ்சியம் வரையறுக்கிறது.

தலைவன் பொருளீட்டுதற் காரணமாகத் தலைவியை விட்டுப்பிரிய நினைக்கிறான்.தலைவனின் பிரிவை உணர்கிறாள் தலைவி.அவ்வாறு உணர்ந்தவள் தலைவனை நோக்கி உனை விட்டு இல்லத்தில் இருப்பது இனிமையன்று.கொடிய பாலைவழியானாலும் அவ்வழியிடைத் துன்பத்திற்கு எம்மையும் துணையாகக் கொண்டு போவதை ஆராயும் போது அதனைவிட வேறோர் இன்பம் இல்லை என்பதை,

“துன்பம் துணையாக நாடின்,அது அல்லது

இன்பமும் உண்டோ, எமக்கு”3

என்கிறாள் தலைவி. இதனைக் கேட்ட தலைவன் பொருளீட்ட வேண்டும் என்ற இலக்கினை விடுத்து இவளை ஆற்றுப்படுத்திப் பிரிவோம் என்று உள்ளமுறிவு ஏற்பட்டுத் தங்கிவிடுகின்றான் தலைவன்.

தலைவன் பொருளீட்ட முற்பட அதனைக் கண்ட தோழி, நீ நன்கு மதிக்கும் பொருள் நம்மால் தேடுவதன்றி ஓரிடத்தில் குவிந்து கிடப்பதில்லை. பொருள் தேடப்போகாது இருப்பவர்கள் எல்லோரும் உண்ணாது அழிந்துவிடுவதும் இல்லை.எனவே பொருள் மீது ஆசை கொள்ளாதே.அது உண்மையான வாழ்க்கையல்ல. எது உண்மையான வாழ்க்கையெனில்,

“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை”4

என்கிறாள்.பொருளுடன் இருப்பது வாழ்கையல்ல தலைவியோடு இருப்பதுதான் செல்வவாழ்க்கை எனக்கூறியதால் பொருள்தேடும் ஆசையை விடுத்து உள்ளமுறிவால் தலைவியோடு உடனுறைகிறான் தலைவன்.

தலைவன் இவ்வாறு உள்ளமுறிவால் செவழுங்குதல் பற்றி வ.சுப.மாணிக்கம் அவர்கள் புறம்போய்ப் பொருள் தேடினும் அடையவேண்டிய இடம் வீடுதானே.வீட்டவள் மனக்கவலையை மாற்றாமல் புறப்படுதல் அறிவுடைமை ஆகாது. ஆதலின் தலைவன் மேலும் சிலநாள் இல்லில் தங்கி அன்பு தோன்ற அளவளாவிப் பிரிவது கடமை. இச்செலவழுங்கல் தலைவிக்கு வெள்ளம் தனிவது போன்ற ஆறுதலைத் தரும். அதோடு இரவுபகல் போல் புணர்வு பிரிவுகள் இயல்பானது எனத் தலைவி உணர்வாள்.தன்முகத் திருப்பம்:

தன்முகத்திருப்பத்தின் தோற்றுவாய் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது என உளவியலாளர் கூறுவர். தேவைகள் நிறைவடையாத போதும் உதவிகள் செய்ய ஆளற்றபோதும், குழந்தை தன்னைக் அடித்துக்கொள்ளல், அழுதல், உதைத்தல், கீறிக் கொள்ளுதல் முதலிய நடத்தைகளை மேற்கொள்கிறது. இவற்றின் பிற்கால வடிவங்களே நகத்தைக் கடித்தல், தலையில் அடித்துக் கொள்ளல், தலையைச் சொறிந்து கொள்ளல் முதலிய மென்மையான நிலைகள் முதலாக பெருமளவில் காயப்படுத்திக் கொள்ளுதல், தற்கொலை முதலிய வன்மையான நிலைகள் வரையா நடத்தைகள் ஆகும் என்பர்.5

தலைவியோடு தலைவன் உறைந்திருக்கும் போது விழாக்காலம் போல ஆரவாரத்துடன் தலைவியின் இல்லம் இருக்கும். அதே தலைவன் பிரிந்த காலத்து விழாக்காலம் நடைபெற்ற பின்னர் பொழிவிழந்து காணப்படும் ஊர் போல தனிமை கொண்டு ஆற்றியிருப்பாள் என்று தவறாக நினைக்காதே. நீ பிரிந்த அன்றே இறந்துபடுவள் என்ற குறிப்புத் தோன்ற தலைவனின் பயணத்தைத் தோழி தடுத்ததை,

“கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்தபின்

புல்லென்ற கலம் போல புலம்புகொண்டு அமைவாளோ”6 என்ற

பாடலில் தலைவனைப் பிரிந்தாள் தலைவி இறந்துபடுவாள் என உரைக்கிறாள்.

இளமையில் வறுமையுற்றவனைப் போல தளிர்கள் வாடின. கொடுப்பதற்கு சிறிய மனம் உடைய செல்வர் போல தன்னைச் சேர்ந்தார்க்கு நிழலின்றி இருந்த பாலை நிலத்தில் தனியொருவனாக பொருளை நச்சிச் செல்வானாயின் அவள் உயிரோடிருக்க மாட்டாள். அதோடு மட்டுமல்லாது நீ விளையாட்டாக பிரிந்து சென்றாலும் அதைக் கண்டு அஞ்சுவாள். இதனை,

“நயந்து நீ நகையாகக்

துணி செய்து நீடினும், துறப்பஞ்சி கலுழ்பவள்”7 எனத் தன்முக நோக்கில் குறிப்பிடுகிறாள் தோழி.கனவு:

வாழ்வின் நிகழ்வுகளை ஏற்க இயலாத சூழலில் உள்ளம் தன்னிச்சையாக ஒரு கற்பனை விளையாட்டில் ஈடுபடுகிறது. உலகையும் வாழ்வையும் உள்ளம் விரும்புமாறு படைத்துக் கொண்டு மனம் தன் போக்கில் மகிழ்கிறது. உண்மை வாழ்க்கையில் பெற இயலாத தேவைகளைக் கற்பனை செய்து மன நிறைவு கொள்ளுதலே இவ்வுள்ளப் போக்கின் அடிப்படையாகும். இது எளிமையாகக் கிடைக்கக் கூடிய பொருத்தப்பாட்டு அமைப்பென உளவியலாளர் கூறுவர்.8

தூக்கத்தில் நிகழ்வது கனவாகவும், விழிப்பில் நிகழ்வது பகல் கனவாகவும் உள்ளது. இரண்டிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதை உளவியல் அறிஞர் யங் குறிப்பிடுவார். பாலைக் கலிப் பாடலில் தலைவன் கண்ட கனவை தோழிக்குக் கூறுவது போல் அமைந்துள்ள பாடலில் தோழியே தலைவன் என் தோளில் சாய்ந்தவாறு உறங்கினார். அப்பொழுது யானை நீர் வேட்கையோடு இருக்க பேய்த்தேரினை நோக்கி ஓடும் மலையின் கானலைக் கடந்து நடுவுநிலையில் முயற்சி செய்து யான் பொருள் தேடி வரும் அளவும் எம் தலைவி ஆற்றியிருப்பாளா? மனையறம் காப்பாளா? எனக் கூறினார்” எனகிறாள் தலைவி.9 இதில் தலைவியிடம் நேரடியாகக் கூறாது கனவில் கூறியுள்ளான். சொல்லவேண்டியதை நேரடியாகக் கூறாது குறிப்பாகச் சொல்லுதலும் உண்டு. நேரடியாகச் சொல்ல முடியாத போது கற்பனையாகவோ, கனவாகவோ பிதற்றி தலைவன் மனநிறைவு கொண்டதை உணரலாம்.உள்ளப் போராட்டம்:

ஒரே நேரத்தில் நிறைவுற இயலாததும் ஒன்றற்கொன்று தனித்தனியானதுமான செயல்நோக்கமும், ஊக்கமும் உள்ளத்தில் இருப்பதனால் விளைவதே உள்ளப் போராட்டம் என்று உளவியலார் கூறுவர்.இக்கருத்தினை அடியொற்றியே பாலைக் கலித்தோழியானவள், பொருளாசை கொண்டு தலைவியைப் பிரிய நினைக்கும் தலைவனை நோக்கி “தலைவனே நீ என் தலைவயிடம் களவு காலத்தில் ஒழுகிய அன்பு கற்புக்காலத்தில் இல்லை. இக்கற்புக் காலத்தில் காட்டும் வெறுப்பின் காரணமாகத்தான் தலைவியைப் பிரிய நினைக்கிறாய்.

“உன் கடன் வழிமொழிந்து இறக்கும் கால் முகனும் தாம்

கொண்டது கொடுக்கும் கால் முகனும் வேறாகுதல்

பண்டும் இவ்வுலகத்து இயற்கை”10

அது போல நீ

யும் களவுக்காலத்தில் தலைவியின் நலனை பொருள் வாங்குபவன் முகம் மலர்ந்து வாங்குவது போல மலர்ந்தாய். அதே இக்கற்புக் காலத்தில் வாங்கிய பொருளை கொடுக்கும் பொழுது முகம் எவ்வாறு மாறுபடுமோ அவ்வாறு மாறுபட்டு தலைவியைப் பிரிய நினைக்கிறாய் என்கிறாள் தோழி.

இதனால் தலைவன் பொருள் தேட முடியாத நிலையும், தலைவியிடம் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டு ஒரே நேரத்தில் இரு செயல்களும் நிறைவுற இயலாத சூழ்நிலை உள்ளதை உணரலாம்.

புறத்தேற்றம்

நமது எண்ணங்களை அல்லது ஆசைகளை பிறர்மேல் ஏற்றிக் கற்பித்துக் காணும் போது நாம் புறத்தேற்றம் புரிகின்றோம் என்றும், வேறுவகையில் பொருளற்றதாக உள்ள சூழல்களுக்கு நம்முடைய ஊகங்களுக்கு உரியமுறையில் பொருள்தருவதும் புறத்தேற்றமாகும் என்று உளவியலர் குறிப்பிடுவர்.

 

நா.பரமசிவம்
தமிழ் விரிவுரையாளர்

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு. நாமக்கல் மாவட்டம்

நா.பரமசிவம் அவர்களின் படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]