|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
எனக்கென்ன வந்தது
பரராசசேகரப்பிள்ளையார் மூலஸ்தானத்து நேர்முற்றம்.
மலத்தின் மேல் ஈமொய்க்கும் ஈக்களாய்
மனிதர்கள் கூட்டம்.
சுற்றி நின்று வேடிக்கை....
மும்மலங்கள் கழிக்கும் இடம்தானே கோவில்.
83ன் முற்பகுதி
விடுப்புப்பார்ப்பதே வாழ்க்கையானது.
பிள்ளையாருக்கும் விடுப்புத்தான்.
கோவில்களின் பக்தர்களின்
கஸ்டங்களை
விடுப்புகளைக் கேட்டுவிட்டும் கூட
கல்லாய்த்தானே இருக்கிறார்கள் கடவுளர்கள்.
ஒட்டகச்சிவிங்கியாய் எட்டி நீட்டினேன் தலையை.
கண்ணாமண்டையில் ஓட்டை போட்டு
பைப்பு வைத்துப் பிதுக்கி விட்டாற்போல்
சீறிச் சீறி அடிக்கிறது குருதி.
குற்றுயிரும் குறையுயிருமாய் ஒருவன்.
நீளக்காற்சட்டை
கட்டைச்சேட்டு
கட்டான உடம்பு.
மகிழ்சியாய் இருந்தது
தமிழ்ஈழம் கிடைக்கும் என்றல்ல
இரத்தத்தைக் கண்டு மயங்கி விழும் நான்
இதைப் பார்க்கும் அளவுக்குப் பழகி விட்டேனே என்று.
பீறிய இரத்தத்தின் வலு
அங்குலம் அங்குலமாய்
இடைவெளி அடங்கத் தொடங்கியது.
உடலில் உயிர் இருக்கிறது.
சுற்ற நின்ற இதயங்களில்தான் உயிர் இல்லை.
மன்னிக்கவும்....இதயமே இல்லை
யாராவது கைகொடுங்கள்
ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம்.
பொலிசுக்காவது அறிவியுங்கள்.
கேட்டேன்...
உரக்கக் கேட்டேன்..
கத்திக்கேட்டேன்
மனிதாபிமானம் இருந்ததினால் கேட்டேன்
உயிருள்ள பிணங்கள் அசையவே இல்லை
பதில்கள் மட்டும் இப்படி
-உனக்கு உவன் யாரெண்டு தெரியுமோ?
-வந்தாய், பார்த்தாய்;, போறாய்..
-வீட்டிலை சொல்லிபோட்டே வந்தனீ?
-துரோகியைச் சுட்டுப்போட்டுகிடக்கு
நீ தூக்க நிக்கிறாய்
-சிங்களவன் போலை கிடக்குது.
-உவனைக் காப்பாற்றி நீயும் துரோகியாப் போறியோ?
-உது பொடியள் சுடேல்லை
அவங்கள் நெத்திப் பொட்டிலை எல்லோ வைக்கிறவங்கள்
-ஓமண்ணை உது மற்ற இயங்கங்கள்தான்
-துரோகி தொலைந்தான்.
-தம்பி விட்டுவிட்டு போய் உன்ரை வேலையைப் பார்.
-உன்னையும் எல்லே போடப்போறாங்கள்
-.......!....?........
வாலை மடக்கி வைத்துக் கொண்டு
நானும் கழன்று விட்டேன் மற்றவர்களைப் போல்.
எனக்கென்ன வந்தது....!
காலக்கரைவில்
இப்படியும் அப்படியுமாய்
இங்கேயும் அங்கேயுமாய்
தெருவெல்லாம் தமிழ் பிணங்கள்
துரோகி என்ற முத்திரைகளுடன்....
கேட்பார் யாருமில்லை
கேட்டவர் எல்லாம் துரோகிதான்
பழகி விட்டதால்
சுற்றி நின்று பார்ப்பாரும் இல்லை.
பார்க்கவே முடியாத நான்
எனகென்ன வந்ததென்று வந்துவிட்டேன்.
புரியவில்லை
இன்னும் புரியவில்லை
இன்றும் புரியவில்லை
துரோகி என்றால் என்ன?
ஈழத்தை எதிர்த்தவன் துரோகி
அண்ணன் தம்பியை எதிர்த்துக் கதைத்தால் துரோகி
காசுவாங்கி ஏமாற்றியவன் துரோகி
கள்ளக்காதலனைக் கண்டு பிடித்தால் துரோகி
உண்மை உளறி துரோகி
கிழக்குப் பறிபோக
யாழ்பாணத்தில் எல்லைச் சண்டையில் துரோகிகள்
முன்பின்னறியா முழுவரும் துரோகிகள்.
ஈழத்தவர் அனைவரம் துரோகிகள்.
துரோகிகள் பட்டியல் நீளும்
மனிதம் எப்படி வாழும்?
எனக்கென்ன வந்ததென்று நானும் வந்து விட்டேன்.
துரோகி என்றால் என்ன?
யார் துரோகி?
உண்டகத்துக்கு இரண்டகம் செய்பவன் துரோகி
நம்பிக்கை மோசடி செய்பவன் துரோகி
கூட இருந்து குழிபறிப்பவன் துரோகி
கூட இருந்தே கொல்லுபவன் துரோகி
துரோகிகள் என்றும் கூடவே இருப்பர்
தொடர்பே இல்லாதவன் துரோகியாவதில்லை.
ஓ... தமிழனுக்குத் தமிழன்தான் துரோகி
எதிரி கூட நல்லவனாகி விடுகிறானே.
எனக்கும் ஒரு துரோகி உண்டு.
என் வாய்
உண்மைகளைச் சொல்கிறது.
அடக்கி விட்டேன்
உணவு உண்ண மட்டுமே திறப்பதால்
என் துரோகி ஒழிந்தான்
இனி எனக்கென்ன வந்ததென்று வந்து விட்டேன்
எனக்கு நண்பர்களே இல்லாதால்
துரோகிகள் இல்லை.
எதிரியை மன்னிக்கலாம்
துரோகியை மன்னிக்கவே கூடாது
துரோகிப் போர் தொடர்கிறது.
குறிக்கோள்கள்....?
குறிக்கோள் குறுகியது.
துரோகி என்பதன் புதிய வரைவிலக்கணம்
உனக்குப் பிடிக்காத எல்லோரும் துரோகிதான்.
துரோகிப் போர் தொடர்கிறது
வெளிநாடுகளிலும்....
எனக்கென்ன வந்தது
எனது துரோகிதான் ஒழிந்து விட்டானே.
பிற்குறிப்பு: பலஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு
சென்ற வருடம் உயிர்மெய் எனும் சஞ்சிகையில்
வெளிவந்தது என்கவிதை. இன்று இக்கவிதையைத்
திரும்பிப்பார்க்கும் போதுதான் தெரிகிறது.
புலிகளுக்கும் இதுதான் நடந்தது. துரோகிப்போர்
இன்னும் தொடருமா?
நன்றி
நோர்வே நக்கீரா |
நோர்வே நக்கீரா
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|