சற்று -
நிமிர்ந்து பார்..
பாரடி;
என் முகத்திலென்ன
முட்களா பதித்திருக்கிறேன்
நீ பார்த்தால் -
குத்திவிட; பார்..
பாரடி;
நீ நீட்டி முழக்கிய
காதல் - ஸ்வாரஸ்யங்களுக்கு
யார்வந்து -
தடை சட்டம் போட்டார்களோ
போட்டிருக்கலாம்,
நானென்ன செய்தேன்?
பார்த்தாய் -
சிரித்தாய் -
பேசினாய் -
நான் காதலொழுகப் பேசியதை
ரசித்தாய் -
எழுதிய என் டைரிகளையெல்லாம்
கொண்டுபோய் படித்துவிட்டு
பதிலுக்கு -
ஆமென்று சொல்லாமல்
அத்தனைக்கும்
வெட்கத்தை பரிசளித்தாய் -
காதலிக்கிறேனென்று நான் சொன்ன
வருடமித்தனை கடந்தின்று -
தீ பார்வை சுமந்தென்னை
சுட்டெரித்தாலும் பரவாயில்லை
சுடாமல் செல்கிறாயே;
ஒரு முறை என்னை
ஏனென்று கேட்கும்
ஒரு பார்வைக்குக் கூடவா
உனக்குள் நானில்லை???
போ... செல்...
சென்று கடைமுனையில் கூட எனை
திரும்பிப் பார்க்காதே, போ..
நாளை யாரேனும்
நான் வேறு யாரையோ
திருமணம் செய்துக் கொண்டதாய்
சொல்வார்கள்;
வேறு யாரேனும்
என்னை காதலிப்பதாய்
சொல்வார்கள்;
சொல்கையில் -
ஒருசொட்டுக் கண்ணீர்
உனை மீறி சிந்துவாயெனில், பார்;
மாட்டாயெனில் - போ.. போ..
உன் கல் மனசிற்கு
நான் காதலித்த நாட்கள்
பரிசாகிப் போகட்டும்!
உன் மவுனத்திற்கு
என் மரணம் ஒரு சொட்டாய்
உன் கண்ணீரில் சிந்தட்டும்!!