நாம் அடுத்து பயிலவிருப்பது வெளிமண்டிலப் பாடல் வகையாகும்.
இப்பாடல் எழுதுகையில் கருத்திற்கொள்ள வேண்டியவை :
1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும்
இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க
வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.
எடுத்துக்காட்டு :
அலைபாய் வங்கக் கடலால் விளங்கும் - புதுச்சேரி
மலைபோல் கலைகள் மறையா திருக்கும் – புதுச்சேரி
நிலையாய் வளங்கள் நிறைந்து சிறக்கும் – புதுச்சேரி
குலையா ஒழுக்கம் கொண்டவர் வாழும் – புதுச்சேரி
- புதுவை அரங்க.நடராசனார்.
இப்பாடலில் தனிச்சொல்லாக நான்கு அடிகளின் இறுதியிலும் புதுச்சேரி அமைந்துள்ளதைக் காண்க. இதைத் தவிர, மற்ற சீர்கள் அனைத்தும் ஈரசைச் சீர்கள்.
இன்னொன்று :
இன்பத் தமிழில் ஏனோ அயற்சொல் - எண்ணிடுக!
அன்பர்க் களிக்கும் அடிசிலில் கல்லேன்? - எண்ணிடுக!
தென்பளி பாலில் தீநஞ் சிடுவதோ? - எண்ணிடுக!
என்புயிர் தோய்ந்த எந்தமிழ் அழிக்கவோ - எண்ணிடுக!
பிறிதொன்று :
செந்தமி ழினத்தினைச் சிங்களர் அழித்தனர் - எம்ஐயா!
முந்தியித் தாலியின் மூளிப் பேய்துணை - எம்ஐயா!
சொந்த இனங்கொலத் துணையருட் செல்வனும் - எம்ஐயா!
இந்த இழிவினர்க் கெங்ஙனம் உய்தியே – எம்ஐயா!
ஐயம் எதுவாயினும் தயங்காமல் கேளுங்கள்.
இனி, எழுதத் தொடங்குக. விருப்பமான கருத்தமைத்து வெளிமண்டிலம் எழுதுக!
--------------------------------------------------------------