சீர் குறித்துத் தெரிந்து
கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முற்றே உலகு.
– இந்தக் குறளை ஏழு பகுதியாகப் பிரித்து எழுதுகிறோம்.
அகர
முதல
எழுத்தெல்லாம்
ஆதி
பகவன்
முதற்றே
உலகு - இவற்றைச் சீர்கள்
என்கிறோம்.
சீர் பற்றிய விளக்கம் பின்னர்
காண்போம்.
அசை பற்றிப் படித்தோம் அல்லவா?
இப்போது சீர்களில் அசை பிரிப்பது எவ்வாறு
எனத் தெரிந்து கொள்வோம்.
அசை பிரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இரண்டு குறில்கள் சேர்ந்து வரின்
இணைக்குறில் – நிரையசை.
மூன்று குறில் சேர்ந்து வரின்,
முதல் இரண்டும் இணைக்குறில் – எனவே நிரையசை அடுத்துள்ளது தனிக்குறில்
ஆக – நேரசை.
நான்கு குறில் சேர்ந்து வரின்,
முதல் இரண்டும் ஓர் இணைக்குறில் – நிரையசை; அடுத்த இரண்டும் இன்னொரு
இணைக்குறிலாக இன்னொரு நிரையசை.
2. அசை பிரிக்கும் போது, ஓர் அசையை அடுத்து நிற்கும் புள்ளி(ஒற்று)
எழுத்தையும் அசையின் இறுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு :
(அ). குதிக்கும் – என்கின்ற ஒரு
சீரில்,
குதிக் – என்பதை இணைக்குறில்
ஒற்று எனப்பிரித்து நிரையசை என்று கொள்ள வேண்டும்;
கும் – குறில் ஒற்று எனக்கொண்டு
நேரசையாகக் கருத வேண்டும்.
(ஆ) பார்க்கிறேன் – என்கின்ற ஒரு
சீரில்.
பார்க் – என்பதை (இரண்டு புள்ளி
எழுத்தையும் சேர்த்து) நெடில் ஒற்று எனக்கொண்டு நேரசையாக ஏற்க
வேண்டும்.
கிறேன் – என்பது குறில் நெடில்
ஒற்று; எனவே நிரையசையாக்க்கொள்ள வேண்டும்.
3. சீரின் முதலிலும் இடையிலும் தனிக்குறில்
ஓர் அசை ஆகாது. சீரின் இறுதியில் தனிக்குறில் அசை ஆகும்.
காண்க : அகர என்பதில்
அக - இணைக்குறில் ஓர் அசை ஆனது.
சீரின் இறுதியில் ர – தனிக்குறில்
அசை ஆனது.
மிகா – என்றால், குறில்நெடில் -
நிரையசையாகவே வரும்.
ஆனால்,
காமி – என்று வந்தால்,
கா – தனி நெடில் - நேரசை;
மி – சீரின் இறுதியில்
தனிக்குறில் - நேரசை. இவ்வாறு இரண்டு அசைகளாகும்.
4. சீரின் தொடக்கத்தில் நிற்கும்
ஐ வரிசை எழுத்துக்கள் நெடிலாகக்
கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும்
அவை குறிலாகக்
கொள்ளப்படும்.
எடுத்துக்காட்டு :
கையில் – கை – நெடில் -
நேரசை.(சீரின் முதலில் ஐ வரிசைச்
சொல்)
போகையில் – கையில் – குறில்இணை
ஒற்று - நிரையசை (சீரின் இடையில் ஐ
வரிசைச் சொல்)
புன்னகை – னகை – குறிலிணை -
நிரையசை. ( சீரின் இறுதியில் ஐ
வரிசைச்சொல்)
5. அசை பிரிக்கும் போது பொருள் பார்த்தல் கூடாது. பெரும்பாலான
அசைகளுக்குப் பொருளே இராது.
6. ஒரு சீரில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அசையாகப் பிரித்தல்
வேண்டும்; மற்றொரு சீரில் உள்ள எழுத்தைச் சேர்த்துப் பிரித்தல் கூடாது.
7.இடையில் மெய்யெழுத்து இருந்தால் அசை வேறாகப்பிரிந்துவிடும்
* * * * *** *** ***
இனி, அக் குறளின் சீர்களை அசை பிரித்துப்
பார்ப்போம்.
அகர என்ற சீரில்,
அக – இணைக் குறில் (ஈருயிர்) எனவே
நிரையசை.
அடுத்துள்ள ர தனிக்குறில்
(ஓருயிர்) எனவே நேரசை.
முதல என்ற சீரில்,
முத – இணைக்குறில் -
நிரையசை
அடுத்துள்ள ல தனிக்குறில் -
நேரசை
எழுத்தெல்லாம் என்ற சீரில்,
எழுத் – இணைக்குறில் ஒற்று -
நிரையசை
தெல் – குறில்ஒற்று -
நேரசை
லாம் – நெடில் ஒற்று -
நேரசை
ஆதி என்ற சீரில்,
ஆ – தனிநெடில் -
நேரசை
தி – தனிக்குறில் -
நேரசை
பகவன் என்ற சீரில்,
பக – இணைக்குறில் -
நிரையசை
வன் – குறில்ஒற்று -
நேரசை
முதற்றே என்ற சீரில்,
முதற் – இணைக்குறில் ஒற்று -
நிரையசை
றே – தனி நெடில் -
நேரசை
உலகு என்ற சீரில்,
உல – இணைக்குறில் -
நிரையசை
கு – தனிக்குறில் -
நேரசை
அசை பிரித்தல் கவனத்தோடு புரிந்து கொள்ள
வேண்டிய பகுதி.
இதில் கண்டிப்பாக ஐயம் எழ வாய்ப்புண்டு.
தயங்காமல் கேளுங்கள்.
அசை பிரித்தல் பயிற்சி
அடுத்து சீர் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்
வளரும்.......
--
நன்றி
தமிழநம்பி